குருந்தமலை, குழந்தை வேலாயுத சுவாமி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் செல்லும் பாதையில், மிகப் பிரசித்தி பெற்ற வைணவத் தலமான காரமடையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அத்திக்கடவு செல்லும் பாதையில் மரங்கள் நிறைந்த பகுதியில் இந்த குருந்தமலை உள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்தும் இக் கோயிலுக்குச் செல்லலாம்.
மூலவர் : சுப்பிரமணிய சுவாமி
அம்பாள் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : ஆறுமுக சுனை
பாடியோர் : அருணகிரிநாதர்
தலச் சிறப்புகள் : கருவறையில் மூலவர் குழந்தை வேலாயுதசாமி மேற்கு நோக்கியுள்ளார். கொடிமரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் குழந்தை வேலாயுதனாக காட்சி தருகிறார்.தோற்றத்தில் பழனி முருகனைப் போலவே காணப்படுகிறார். கிழக்குப் பிராகாரத்தில் மேற்கு நோக்கிய ஆதிமூலவர் சந்நிதி உள்ளது. இங்குதான் முதலில் புராதனக் கோயில் இருந்துள்ளது. அதையொட்டி அகத்திய லிங்கம் ஒன்றும் உள்ளது. இவற்றை வணங்கிவிட்டுச் செல்லும்போது கொடிமரத்துடன் கூடிய மூலவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்குதான் குழந்தை வேலாயுத சுவாமி அருள்புரிகிறார். தினமும் காலை குழந்தை வடிவில் காட்சி தரும் குமரன், மாலையில் முதியவர் தோற்றத்தில் அருள்புரிகிறான். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சூரியனுடைய பொற்கிரணங்கள் முருகனுடைய திருமேனி மீது விழும் அதிசயம் நடக்கிறது. போகரின் சப்த காண்டத்தில் குருந்தமலை பற்றிய குறிப்பு உள்ளது. இதுதவிர குருந்தமலை மாலை, குருந்தமலை பதிற்றுப்பத்து அந்தாதி, குருந்தமலை பிள்ளைத் தமிழ், கம்பீர விநாயகர் பதிகம், குருந்தமலை திருப்புகழ் உள்பட பல நூல்களும் குருந்தமலையின் புகழைப் பறைசாற்றுகின்றன .
தல வரலாறு : அகத்திய முனிவரும் , ஆதிசேஷனும், சூரியனும் குமரனை வழிபட்டதாகத் தலவரலாறு கூறுகிறது. கொங்கு நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் சிலர், சேர நாட்டில் மிளகு, இலவங்கம், கிராம்பு ஆகியவற்றை வாங்கி மூட்டைகளாகக் கட்டி பொதி மாடுகளில் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக சென்றனர். வழியில் குருந்தமலை அடிவாரத்தில் ஒரு நாள் இரவு தங்கினர். அப்போது அவர்களிடம் வந்த சிறுவன் ஒருவன், “இவை என்ன மூட்டைகள்?” என்று கேட்க, சிறுவன்தானே என்ற அலட்சியத்தில் “தவிட்டு மூட்டைகள்’ என்றனர் வியாபாரிகள்.
மறுநாள் அவர்கள் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க, அனைத்தும் தவிட்டு மூட்டைகளாகவே மாறியிருந்தன. அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் முருகனே சிறுவன் வடிவில் வந்தான் என்பதை உணர்ந்து குருந்தமலை மீது வீற்றிருந்த குமரனை வேண்டினர். உடனே அந்த மூட்டைகள் அனைத்தும் மிளகு, இலவங்கம், கிராம்பு மூட்டைகளாக மாறின. இப்படி வியாபாரிகளை சோதித்த குமரன், குருந்தமலை மீது குழந்தை வேலாயுத சுவாமியாக குடிகொண்டுள்ளார்.
கோயில் அமைப்பு : சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் சோலைகள் நிறைந்த அமைதியான சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 750 வருடங்களுக்கு முன்னர் உருவான கோயில். குமரனுக்கு குருந்த மரங்கள் மிகவும் உகப்பானவை. இம்மலையில் குருந்த மரங்கள் அதிகமாக இருந்ததால் “குருந்தமலை’ என்றாயிற்று. அகத்தியருக்கு முருகன் குருவாக இருந்து உபதேசித்ததால் குருந்தமலை என்று பெயர் ஏற்பட்டதாகவும் வரலாறு.
குருந்தமலை அடிவாரத்தில் ஐந்துநிலை இராஜகோபுரத்துடன் கூடிய நுழைவாயிலைத் தொடர்ந்து மலையேறிச் செல்ல நன்கமைக்கப்பட்ட படிக்கட்டுகள் தொடங்குகின்றன. படிக்கட்டுகளின் இருபுறமும் இராஜகம்பீர விநாயகர் சன்னிதி, கன்னிமார் சன்னிதி, நாகர் சன்னிதி, பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னிதி, இடும்பன், கடம்பன், வீரவாகு-மூவரின் சன்னிதிகள் உள்ளன. அவற்றைத் தாண்டியதும் படிக்கட்டுகளின் ஒருபுறம் காசிவிசுவநாதர் சன்னிதி விசாலாட்சியம்மனுக்குத் தனி சன்னிதியுடனும் மறுபுறம் தீபத்தூண் மற்றும் இராஜநாகலிங்க சன்னிதியும் அமைந்துள்ளது. இவ்விருவர் சன்னிதிகளைச் சுற்றி சூரியன், பஞ்சாட்சர கணபதி, பஞ்சலிங்கம் சன்னிதி, வள்ளி-தேவானை உடனுறை சண்முகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், நவக்கிரக, காலபைரவர், சந்திரன் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. காசிவிசுவநாதர் சன்னிதி தாண்டி மேலே குழந்தை வேலாயுதசாமி சன்னிதி இராஜகோபுரத்துடன் சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது. வடக்கு நோக்கியுள்ள ராஜகோபுரம் வழியே கோயிலினுள் நுழைந்தால் வலது பக்கம் கம்பீரமான விநாயகர் வீற்றிருக்கிறார். அடுத்துள்ள மண்டபத்தைக் கடந்து சென்றால், வலப்பக்கம் சப்த மாதாக்கள் அருள்புரிகின்றனர். இங்கு நாகதீர்த்தம், மயில்தீர்த்தம் என்ற சுனைகள் பாசி பிடித்துப்போய் குப்பைகூளங்களால் நிறைந்து உள்ளது.படிக்கட்டுக்கு கீழ் செங்குத்தாக உள்ள பாறையில் நாகபந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாகங்கள் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து ஒர் அழகியகோலத்தின் உருவில் காட்சி தருகின்றன. மலைக்குக் கிழக்கில் இன்னொருமலையில் வள்ளி குகை உள்ளது.
கிழக்குப் பக்கம் பாறையில் இயற்கையாக ஏற்பட்ட சண்முகச்சுனை, ஆறுமுகச்சுனை உள்ளன. மலையில் கோயிலைச் சுற்றியும், அடிவாரத்திலும் பல சுனைகள் உள்ளன. இவை அனைத்தும் நலம் தரும் தீர்த்தங்களாகப் பயன்படுகின்றன. மயில் வடிவில் உள்ள மயில் சுனையில் உள்ள நீர்தான் மூலவருக்கு திருமஞ்சனம் செய்யப் பயன்படுகிறது. கர்ப்பக் கிரகத்திற்கு கீழ்ப்புறம் உள்ள ஆறுமுகச் சுனையானது மூலவரின் திருப்பாதங்களை நனைக்கும் வகையில் அமைந்துள்ளது. கீழே அடிவாரத்திற்கு எதிர்ப்புறமுள்ள சிறிய குன்றின் மேல் அனுமன் சந்நிதி உள்ளது. இக்கோயிலின் எதிர்ப்புறம் அனுமந்த தீர்த்தம் இருக்கிறது.
ஒவ்வொரு தமிழ் மாத முதல் தேதியிலும் எல்லா மூர்த்தங்களுக்கும் அபிஷேகத்துடன் அன்னதானம் நடக்கிறது. கிருத்திகையில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தைப்பூசப் பெருவிழா 10 நாட்களுக்கு நடக்கிறது. காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு