தபசுமலை, பாலதண்டாயுதபாணி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், புதுக்கோட்டை மாவட்டம் தபசுமலை என்னும் ஊரில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை திருமயம் சாலையில், லேனாவிலக்கு எனும் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து விராச்சிலை செல்லும் செல்லும் சாலையில், சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
மூலவர்: பாலதண்டாயுதபாணி
தலச் சிறப்புகள் : இந்த மலையில் முருகப் பெருமான் பாலதண்டபாணியாகக் காட்சி அளிக்கின்றார். இந்த முருகன் முனிவர்களாலும், சித்தர்களாலும் போற்றி வணங்கப்பட்டவர். சப்த ரிஷிகள் தவம் செய்ததால் இந்த மலைக்குத் ‘தபசு மலை’ என்ற பெயர் வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மலை அடிவாரத்தில் சப்தரிஷிகளின் சிலையும், பீடமும் காணப்படுகின்றது. மிகவும் சக்தி வாய்ந்ததாக இந்தப் பீடங்கள் கருதப்படுகின்றன. ஒருகாலத்தில், முனிவர்கள் வேல் வைத்து வழிபட்டுள்ளனர். அந்த வேலைக் கண்டு சிலிர்த்த மக்கள், அந்த இடத்தில் முருகப்பெருமானுக்கு விக்கிரம் அமைத்துப் பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினார்கள். மலையடிவாரத்தில் சப்தரிஷிகள் வழிபட்ட இடத்தில் குடவரை கோயில் உள்ளது. தபசுமலை தவசிகள் தவம் செய்த மலை. சப்தமுக்தி மலை மருவி என்ற பெயர் மருவி தத்துமுக்தி மலை எனப்பெயர் பெற்றதது. ஏழு மகான்கள் முக்தி பெற்ற மலை.
இந்த கோயிலின் முக்கியமான விசேஷம் மூலிகை கலந்த பிரசாதம். இந்தப் பிரசாதத்தை உட்கொண்டால், சர்க்கரை நோய் குணமாகும். குடல் புண்ணில் இருந்து விடுபடலாம்; வலிப்பு போன்ற நரம்புத் தளர்ச்சி நோயையும் இது கட்டுப்படுத்துகிறது எனச் சொல்லி சிலிர்க்கின்றனர் பக்தர்கள். கிரக தோஷம் மற்றும் நாக தோஷம் உள்ளவர்களுக்கு இங்கே முருகப்பெருமானின் சன்னதியில் சிறப்பு யாகம் செய்யப்படுகிறது. இதில் கலந்துகொண்டு தரிசித்தால், விரைவில் தோஷங்கள் யாவும் விலகும். இங்கேயுள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் ரொம்பவே சக்தி வாய்ந்தவர். பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைகளை ஒரு சீட்டில் எழுதி வைத்தால், அந்தக் கஷ்டங்களை உடனே தீர்த்துவைத்துவிடுவாராம் பைரவர். இவரிடம் வேண்டிக்கொண்டு, கடன் தொல்லையில் இருந்து மீண்டு வந்தவர்கள் ஏராளம் என்கின்றனர், பக்தர்கள். கந்த சஷ்டி நாளின்போது விரதம் மேற்கொண்ட பெண்கள், ஒரேயொரு முறை தபசுமலைக்கு வந்து முருகப்பெருமானைத் தரிசித்து விளக்கேற்றிப் பிரார்த்தித்தால், விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பது ஐதீகம். பிள்ளை வரம் வேண்டுவோர், முருகக் கடவுளின் திருப்பாதத்தில் வைத்து பிரசாதமாகத் தரப்படும் எலுமிச்சைப் பழத்தைச் சாறாக்கிச் சாப்பிட.. குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மலையடிவாரத்தில் சப்தரிஷிகள் வழிபட்ட இடத்தில், குடைவரைக் கோயிலும் உள்ளது. இந்த இடத்தில் ஐந்து நிமிடம் தியானித்து கந்தக் கடவுளை வணங்கினால், ஞானமும் யோகமும் கைகூடும் என்பது உறுதி.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா, வைகாசி விசாகம், பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறுகின்றது. காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை,மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : புதுக்கோட்டை, திருமயம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு