சிட்னி முருகன் கோயில்
திருத்தல இருப்பிடம் : ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னி நகரிலிருந்து 25 கி.மீ மேற்காக உள்ள மேய்சு ஹில் என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கிறது.
குன்றுதோறும் குமரன் என்பதினால் அவர் எழுந்தருளும் இடங்கள் பெரும்பாலும் மலைகளில்தான் அமைந்து உள்ளன. சிட்னி முருகனும் 'மேஸ்ஹில்ஸ்' என்ற மலைப் பகுதியில்தான் உள்ளது. அந்த இடத்தை வைகாசிக் குன்று என அழைக்கின்றனர். மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள முருகனின் திருவுருவம் மகாபலிபுரத்து சிற்பக்கலை நிபுணரால் ஆகம நெறிமுறைக்கு அமைய நுட்பமாகச் செதுக்கப்பட்டது. ஐந்து கருவறைகளைக் கொண்டது சிட்னி முருகன் ஆலயம். வலது பக்கம் விநாயகரும் இடது பக்கத்தில் வள்ளி தெய்வானை சமேதரராக முருகனும் இடையில் உள்ள மூன்று கருவறைகளில் வலப்பக்கத்தில் சிவலிங்கமும் இடப்பக்கத்தில் சிவகாமசுந்தரியும் நடுவண் கருவறையில் முருகனும் எழுந்தருளியுள்ளனர். நவக்கிரகம், வைரவர், சண்டேஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனியே சந்நிதிகள் உண்டு. அலங்காரத்தூண்களில் ஆறு படைவீடுகள், மற்றும் கதிர்காமம், செல்வச்சந்நிதி, வெருகலம்பதி, நல்லூர் ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ள முருகனின் திருவுருவங்கள் கற்பனைத் திருவுருவங்களாக இடம்பெற்றுள்ளன.
சிட்னியில் முதன்முதலில் முருக வழிபாட்டைத் தொடங்கியவர் திரு சி. தணிகைஸ்கந்தகுமார். 1983ஆம் ஆண்டு முருகன் சிலை ஒன்றை யாழ்ப்பாணத்தில் இருந்து வரவழைத்து தமது இல்லத்திலும் பின்னர் ஸ்ட்ரத்பீல்ட் மகளிர் உயர்நிலைப் பாடசாலையிலும் வழிபாட்டை நடத்தினார். மேலும் அந்த பூஜையில் கலந்து கொள்ள அவர் தனது நண்பர்களையும் அழைத்தார். 1986 ஆம் ஆண்டில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் தன் குடும்பத்தினருடன் அந்த சிலையை எடுத்துச் சென்று 'ஸ்டிராத்பீல்ட்' உயர்நிலைப் பள்ளியில் இருந்த பொது அறை ஒன்றில் வைத்து அதற்கு பூஜை செய்து வழிபட ஏற்பாடு செய்தார். இன்றும் அந்த சிலை ஸ்தாபனம் செய்யப்பட்டு உள்ள அந்த உயர்நிலைப் பள்ளியே தமிழர்கள் ஒன்று கூடும் இடமாக அமைந்து உள்ளது. 1985 ஆம் ஆண்டு சைவ மன்றம் என்ற அமைப்பை சார்ந்தவர்கள் பத்து வருட காலம் கஷ்டப்பட்டு சிட்னி முருகன் என்ற ஆலயத்தைக் கட்டினார்கள்.
1990இல் வீதிப் போக்குவரத்து அதிகரசபையிடம் இருந்து மாய்சு ஹில் ஒரு காணியைச் சைவமன்றம் வாங்கியது. 1994 ஆம் ஆண்டு கோயிலுக்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்டது. முதலில் தமிழ்க் கலாச்சார மண்டபம் கட்டப்பட்டு 1995 ஏப்ரல் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கலாச்சார மண்டபத்தில் சித்தி விநாயகர், சிதம்பரேஸ்வரர், சிவகாமசுந்தரி ஆகிய உற்சவமூர்த்திகளுடன் முருகன் சிலை ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1997இல் கோயிலின் கட்டிட வேலைகள் ஆரம்பமாகி 1999 ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது
'ஸ்டிராத்பீல்ட்'டில் இருந்த பள்ளியில் இருந்து சுமார் பத்து கிலோ தொலைவில் இருந்த மேஸ் மலை என்ற இடத்தில் உள்ள அந்த ஆலயத்தின் மூன்று பக்கங்களிலும் எந்த குடியிருப்புக்களும் கிடையாது. ஆரம்பத்தில் அந்த இடத்தை வாங்கிய அமைப்பினர் அங்கு கட்டிடம் கட்டி அதை முருகனுக்கு விழாக்கள், ஆராதனைகளை செய்யவும், கலையரங்கமாகவும் பயன்படுத்த திட்டமிட்டு இருந்தார்கள். 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 'முருகன் ஆலயம்' மற்றும் 'தமிழ் கலாச்சார மையத்தை' அமைக்க அந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர். 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிட்னியின் மேற்குப்புறத்தில் இருந்த அந்த 'மேஸ் மலையில்' முருகன் ஆலயக் கட்டிடப் பணி துவங்கியது. 'நியூ சவுத்வேல்ஸை' சேர்ந்த சைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு மாபெரும் அந்த ஆலயத்தைக் கட்டி முடித்தனர். அந்த ஆலயத்தில் இருந்த முன்று பிரிவுகளில் மத்தியில் முருகப் பெருமானும் மற்ற இரண்டிலும் சிவன் மற்றும் அம்பாள் சிலைகள் நிறுவப்பட்டன. மூல சன்னதியில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
நியூ சவுத்வேல்ஸ்லில் உள்ள சிட்னி நகரில் 'ஹெலன்ஸ்பர்க்' என்ற இடத்தில் இருந்த சிவன் ஆலய மண்டப வளாகத்தில் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி ஆலயம் அமைந்து உள்ளது. சிவனாலயத்தின் பக்கத்திலேயே முருகன் ஆலயமும் அமைந்து உள்ளது சிறப்பைப் பெறுகின்றது. 'ஹெலன்ஸ்பர்கில்' சிவாலய மண்டப வளாகமும், வெங்கடேஸ்வர ஆலய மண்டப வளாகமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. வளாகத்தில் சிவன், பார்வதி, முருகன், தெய்வானை, துர்காம்பிகை, தட்சிணாமூர்த்தி போன்றவர்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. வெங்கடேஷ்வரர் ஆலயத்திலோ மகாலஷ்மீ, ஆண்டாள், ராமர், சீதை, லஷ்மணர் மற்றும் ஆஞ்சனேயருக்கு சன்னதிகள் உள்ளன. 'ஹெலன்ஸ்பர்கில்' சிவன், பார்வதி, வள்ளி மற்றும் தெய்வானை போன்ற தெய்வ சன்னதிகளுடன் சுப்ரமணிய ஸ்வாமியை மூலஸ்தானத்தில் வைத்து 1994 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா கும்பாபிஷேக மலரில் முருகனைப் பற்றி பின் வருமாறு குறிப்பிடப்பட்டு உள்ளது ''சிவபெருமானுடைய புதல்வாரன அவர் கார்த்திகேயர், ஸ்கந்தன், ஷண்முகன், முருகன் என்ற பெயர்களில் அழைக்கப்படுபவர். ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக அகம சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.
சிட்னி முருகன் கோயிலில் மகோற்சவம் ஆண்டு தோறும் கொடியேற்றத்துடன் தொடங்கி ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் பங்குனி உத்தரத்தன்று தீர்த்தத் துடனும் பதினோராம் நாள் பூங்காவனம் திருக்கல்யாண விழாவுடன் நிறைவடையும்.